Design a site like this with WordPress.com
தொடங்கவும்

தமிழ் சோலை

கோழை.. சிறுகதை பகுதி – 1

ஆங்காங்கே.. மிதமான ஒளியினை உமிழ்ந்து கொண்டிருந்தன குட்டி குட்டி விளக்குகள் தங்க நிற மினுமினுப்புடன்.. அந்த ஹோட்டலில். தடுக்கபட்டிருந்த ஃபேமிலி அறையில் மௌனித்துக் கிடந்தார்கள் பாலாவும்.. கீதாவும். சர்வர் அங்கே வந்து மெனு கார்டினை வைத்து விட்டுப் போனது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. “சொல்லு பாலா.. ரெண்டு மாசம் கழிச்சி இன்னிக்குதான் என்னை பார்க்கணும்.. பேசணும்னு தோனிச்சா….

போன் பன்னா கூட எடுக்கல. எம்மேல அப்படி என்ன வெறுப்பு உனக்கு..?”கீதாதான். முதலில் மௌனம் கலைத்தாள். அவளை நேரெதிர் நோக்கவே தயங்கினான். அவளை நோக்காமல் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தான். சோகம்..பயம்..என்கிற கலவையை அவன் முகம் அப்பிக் கொண்டிருந்தது.

“கேட்கிறேனில்ல… சே..சம்திங் யா…”

அவன் தோள்களைப்பற்றி உலுக்கினாள். “என்ன சொல்வது நான். எனக்குத் திருமணம் நிச்சயத்து விட்டதையா.. இல்லை.. வெட்டிங் இன்விடேஷன் அளிக்க அழைத்தேன் என்பதையா…?

எப்படி தாங்குவாய் நீ.. எப்படிக் கூறுவேன் நான்..? “மனதில் உள்ள உரையாடலை வாய் பேச மறுத்தது.. பாலாவிற்கு. “சார் என்ன சாப்பிடுறீங்க.. ” சர்வர் தன் கடமைக்குக் கேட்க.. கீதாவிற்குப் பிடித்தமான பலூடாவினை இரண்டு ஆர்டர் செய்தான்.மீண்டும் மௌனம்.. சூனியம் வைத்தது போன்ற சூழல்..நான் கிளம்பறேன் பாலா…

எழ முயன்றவளின் கரத்தினைப் பிடித்து கெஞ்சுதலுடன் அமர வைத்தான். அவள் கரம் பற்றும்போதெல்லாம் உள்ள இன்பம்.. சுகம்.. இப்போது அவனிடத்தில் இல்லை. ஒரு நடுக்கம்.. அதை கீதாவும் உணர்ந்திருக்க வேண்டும். “ஏன் பாலா உன் கை இப்படி நடுங்குது.. என்னாச்சி உனக்கு.. ” நம்ம லவ் பத்தி வீட்ல சொல்லி ஏதாச்சும் பிரச்சினை ஆயிடுச்சா…

“அப்பிராணியாய் கேட்டாள் கீதா. கீதா கேட்டது தீப்பந்ததால் சுட்டது போல் இருக்க.. துடித்தான். உடலில் ஒரு வெப்பத் தாக்குதல்.. குப்பென்று வியர்க்க.. விழிகளில் கண்ணீர் துளி ர் க்க… அழுகையை அடக்க நினைத்துத் தோற்றுப்போனான். இப்போது அவனின் பயம் அவளையும் பீடித்துக் கொள்ள அவளின் கண்களும் அழ ஆயத்தம் ஆகியிருந்தது..

#தொடரும் #

சொ.சாந்தி.

தமிழ் கவிதைகள்

வலிகள் விற்பனைக்கு அல்ல

வலிகள் விற்பனைக்கு அல்ல
யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்னாம்…

இதனை மிஞ்சுகிறது
என்னுடைய மதிப்பு
இருப்பதினால்
என் சம்பள வரவு
இறந்துவிட்டாலோ
அலுவகத்திலிருந்து
அத்தனை வரவும்…

நான் விபத்தில்
அடிபட்டாலும்
ஆயிரம்பொன்னாய்…

கொட்டிய குருதிக்கும்
சேதப்பட்ட என்
எலும்புகளுக்கும்
சிரசினுள் புகுந்துவிட்ட
நோயறியா வலிகளுக்கும்
சிந்திய கண்ணீருக்கும்
இழப்பீடாய்… காப்பீடு…

முன் நிறுத்தப்படுகின்றேன்
நீதிபதி முன்னிலையில்…

வலிகள் விலை
பேசப்படுகின்றன
வழக்காடு மன்றத்தில்….

என் வலிகளை
குறைத்து
மதிப்பிடுகிறார்
எதிர் தரப்பு வழக்குரைஞர்
காப்பீட்டு நிறுவனத்திற்கு
செலவினங்களை குறைக்க…

என் வலிகளை
அதிகம் மதிப்பிடுகிறார்
என் வழக்குரைஞர்
வழக்குக் கட்டணத்தை
எங்களிடத்தில்
வந்தவரை வசூலிக்க…

முன்னதாக
பேரம் நடந்ததா??
இல்லை பேசி
முடிவெடுக்கப் பட்டதா???

கணிசமான விலைக்கு
என் வலிகள்
விலைபோனது
தீர்ப்புகள்
சாதகமானதில்
குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி….

வழக்குரைஞருக்கும்தான்…

வந்த காப்பீட்டுத்
தொகையை ஆளாளுக்கு
பங்கிட்டுக் கொண்டனர்
என்னை விடுத்து…

விலை போன வலிகள்
மட்டும் இன்னும்
என்னிடத்தில்
யாரும் எடுத்துக்
கொள்ளப்படாமலேயே….

மனம் சமாதானப்
பட்டுக் கொள்கிறது
என் மதிப்பு
யானையின் மதிப்பைவிட
ஒரு படி மேலாய்…

உண்மைதானே
உரைத்திடுங்கள்..!!!!!.

சிவ சாந்தி